பிரசவத்தில் பெண் உயிரிழப்பு- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
- அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
- சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சங்கீதா(வயது 24). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சங்கீதா, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 26-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததால், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப்பையையும் அகற்றி உள்ளனர். தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காத நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சூழலில் டாக்டர்களின் கவனக்குறைவே சங்கீதா சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி குமார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.