பொள்ளாச்சி அழுக்கு சித்தர் ஜீவசமாதியில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு வழிபாடு
- முக்கிய நிகழ்வுகளின்போது இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
- சிவபுராணம் பாடி தீபாராதனை செய்து வழிபட்டார்.
வால்பாறை:
புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சித்தர் என அழைக்கப்படும் அழுக்கு சுவாமி ஆகியோர் விளங்குகிறார்கள்.
இவர்களில் அழுக்கு சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் உள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர் ரங்கசாமி இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி நேற்று அவர் வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சித்தர் ஜீவசமாதிக்கு வந்தார். அங்கு பூ, பழம் வைத்தும், மாலை அணிவித்தும், சிவபுராணம் பாடியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை செய்து வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.
தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் எழுதிய 3 புத்தகங்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் எழுத்தாளர்கள் எத்தகைய கருத்துக்களை வேண்டுமானாலும் எழுதலாம், வெளிப்படுத்தலாம். மற்றவர்களை பாதிக்காதவாறு எழுத வேண்டும். நம்முடைய எண்ணம், செயல்பாடு எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
தேசிய கல்விக்கொள்கை குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது கோவிலுக்கு வந்து இருக்கிறேன். எனவே அதுபற்றி பேச முடியாது என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.