கதம்பம்

பிரபலமாகும் வீட்டுப் பள்ளிகள்

Published On 2025-01-22 04:15 IST   |   Update On 2025-01-22 04:15:00 IST
  • பல மாநிலங்களில் வீட்டுப்பள்ளி முறைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றபட்டன.
  • ஐம்பது மாநிலங்களிலும் வீட்டுப்பள்ளி முறை வலுவாக இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஒரு நல்ல விசயம் ஹோம்ஸ்கூலிங். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் அம்மாவே ஆசிரியராக மாறி பாடங்களை கற்பிக்கும் முறை.

1970க்களில் இம்முறை பரவலானபோது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் படிக்க வைக்க முடியுமா என பலத்த விவாதம் எழுந்தது. ஜான் ஹோல்ட் என்பவர் வீட்டிலேயே பெற்றோர் பிள்ளைக்கு தேவையான அனைத்தையும் கற்பிக்கமுடியும், நீதி, நெறிமுறைகளை வீட்டில் கற்பிப்பது மாதிரி அரசு பள்ளிகளில் கற்பிக்கமுடியாது என்றார். அவருக்கு கணிசமாக ஆதரவு கூடியது.

அதன்பின் பல மாநிலங்களில் வீட்டுப்பள்ளி முறைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றபட்டன. இன்று ஐம்பது மாநிலங்களிலும் வீட்டுப்பள்ளி முறை வலுவாக இருக்கிறது. சுமார் 5% குழந்தைகள் வீட்டுப்பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இம்மாதிரி குடும்பங்களில் அம்மா தான் வேலைக்கு போகாமல் ஆசிரியராக இருந்து பாடங்களை கற்பிப்பார். தந்தை வேலைக்கு போவார். சில பாடங்களை தந்தையும் கற்பிப்பதுண்டு. இருவராலும் கற்பிக்கமுடியாத பாடங்களை கற்பிக்க வீட்டுப்பள்ளி அசோசியேசன் மாதிரி அமைப்புகள் உண்டு.

உங்களுக்கு அல்ஜீப்ரா தெரியாதா? பிரச்சனை இல்லை. உங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் இன்னொரு வீட்டில் அல்ஜீப்ரா தெரிந்த ஒரு ஹோம்ஸ்கூலர் இருப்பார். அவர் அதை கற்பிப்பார்.

இணையம் வந்தபின்னர் கான் அகாடமி, யுடெமி, யுடியூப் மாதிரி பல வசதிகள் வந்துவிட்டன. ஹோம்ஸ்கூலிங் செல்லும் குழந்தைகள் மாலையில் ஒன்றுகூடி விளையாடி, சக மாணவர்களுடன் பழகும் அனுபவத்தையும் அடைகிறார்கள்.

12வது வகுப்பில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என்ன பரிட்சையை எழுதுகிறர்களோ, அதையே தான் இவர்களும் எழுதி பாஸ் செய்யவேண்டும். வீட்டுப்பள்ளி மாணவர்கள் அந்த பரிட்சையில் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்கிறார்கள். நல்ல கல்லூரிகளிலும் அட்மிஷன் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களை விட இவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தான் ஆய்வுகள் கூறுகின்றன.

அதிலும் இப்போது பள்ளிகளில் பரவும் கஞ்சா, வன்முறை கலாசாரத்தை கண்டு பலரும் வீட்டுப்பள்ளி முறையை பற்றி யோசிக்க துவங்கியுள்ளனர். கொரொனா சமயம் பலரும் வீட்டுப்பள்ளி முறைக்கு மாறினார்கள்.

குடும்பங்களிலும் இதனால் அமைதி நிலவுகிறது. விவாகரத்து விகிதம் 50%க்கும் மேல் இருக்கும் அமெரிக்காவில் இக்குடும்பங்களில் 5% தான் விவாகரத்து விகிதம் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாமல் வீட்டுப்பள்ளி முறையை எல்லாராலும் கையாள இயலாது.

உலகெங்கும் பல நாடுகளில் வீட்டுப்பள்ளிகள் செயல்படுகின்றன என்றாலும், அமெரிக்காவில் தான் இதன் சதவிகிதம் மிக அதிகம்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News