- மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
- சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?
"டேய்...! கையைக் கொடுடா, வாழ்த்துக்கள்!"
"எதுக்கு?"
"வேலை கிடைச்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன்"
"ஓ.. ஆமாம். நன்றி!"
"இப்படி ஒருத்தரை ஒருத்தர் கையைப் பிடிச்சிக் குலுக்குற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா உனக்கு?"
"தெரியாதே.."
"அந்தக் காலத்துல வீரர்கள் எப்பவும் வாள் அல்லது துப்பாக்கியைக் கையிலே வச்சிருப்பாங்களாம்.. ரெண்டு பேர் சந்திக்கும் போது, 'என் கையிலே ஆயுதம் இல்லை. தாக்குவேன்னு பயம் வேண்டாம். நாம் நட்புறவுடன் இருப்போம்...' அப்படீங்கறதைத் தெரிவிக்கறதுக்காக கை கொடுத்துக்குவாங்களாம். அந்த வழக்கம் அப்படியே நிலைச்சி போச்சு"
"இது ஒரு நல்ல பழக்கம் தான். மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் அன்பா இருக்கணும்...ஆதரவா இருக்கணும். சண்டை போடுறது ரொம்பத் தப்பு. அன்பைக் காட்டறதும் கைதான், அடிக்க ஓங்குறதும் கை தன்!"
"ஆனா சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?"
"எதை வச்சி சொல்ற"
"ஆமாம். நேத்திக்கு கூட கடைத் தெருவுல எனக்கும் இன்னொருத்தனுக்கும் பெரிய சண்டை. கடைசியில கையை ஓங்கினதும் தான் சண்டை நின்னுது"
"அப்படியா.."
"ஆமாம். ஒரே அடி, அவ்வளவு தான்."
"யாருக்கு, அவனுக்கா?"
"இல்லை...எனக்கு!"
- தென்கச்சி சுவாமிநாதன்.