- மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பில் வரும்.
- அணிந்து கொண்டுதான் அவ்வளவு விரைப்பாக நிற்கிறார்.
அமரர் ஜீவானந்தம் அவர்களின் எளிமையை அனைவரும் அறிவார்கள்.
அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது அவர் தொகுதியில் ஒரு அரசு விழா.
முதல்வர் காமராஜர் வருகிறார்.
ஜீவா வரவில்லையா என்று விசாரிக்கிறார்.
வரவில்லை என்று அறிந்ததும் அப்போது ஜீவா வசித்துக்கொண்டிருந்த சாக்கடையும் சகதியும் நிறைந்த குறுகிய சந்துக்குள் நடந்தே வருகிறார்!
அங்கே அவர் கண்ட காட்சி!
இடுப்பில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, துவைத்த வேட்டியைக் காய வைத்து நின்று கொண்டிருந்தார் ஜீவானந்தம்!
கர்மவீரரின் நெஞ்சம் எப்படித் துடித்துப் போனதோ!
"என்னடா இது, நானே ஒரு பரதேசி! என்கிட்டயாவது நாலு வேட்டி சட்டை இருக்குண்ணேன்; இவன் நம்மளவிட பெரிய பரதேசியால்லா இருக்காண்ணேன்!"
என்று தவித்துப் போயிருப்பார்!
இன்று எனக்குத் தெரிந்த ஒரு கட்சிக்காரருக்கு வேட்டி சட்டை (1 செட்) பசை போட்டு சலவை செய்ய குறைந்தது ரூ.150 ஆகிறது!
அதுவும் அந்தச் சிறப்புச் சலவைக்கு அழுக்குத்துணிகள் ஐம்பது கி.மீ. கூட பயணம் செய்து திரும்பி வருகின்றன!
இதுவே மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பில் வரும்!
அதை அணிந்து கொண்டுதான் அவ்வளவு விரைப்பாக நிற்கிறார்!
ஆனால் ஒரு எம்.எல்.ஏ. , மாற்றுத் துணி இல்லாமல் உடுத்திய வேட்டியைத் துவைத்து, அது உலர்ந்த பிறகே உடுத்திக்கொண்டு விழாவிற்குப் போக வேண்டும் என்று காத்திருந்தது இந்த மண்ணில் தான் நடந்ததய்யா!
-மா. பாரதிமுத்துநாயகம்