வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள்
- நம் பொருளாதார நிலை என்ன என்பது பிரச்சனையே இல்லை.
- தெரு ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஒரு பகுதியை கடை ஒன்றுக்கு வாடகைக்கு விடுவார்கள்.
ஒரு குடும்பத்துக்கு ஏழு வகையிலான வருமானம் வரவேண்டும் என பயர் (FIRE- Financial Independece Retire Early) வட்டங்களில் சொல்கிறார்கள்
நம் பொருளாதார நிலை என்ன என்பது பிரச்சனையே இல்லை. ஒவ்வொரு படியாக மேலே எறிக்கொண்டே, வருமானம் வரும் வழிகளை அதிகரித்துக்கொண்டே போகவேன்டும். என் இளவயதில் எங்க ஊரில் பல குடும்பங்களுக்கு பல வழிகளில் பணம் வரும். பெண்கள் மதியம் உணவுக்கு பின் சேர்களுக்கு பிளாஸ்டிக் நாரை போட்டு பணம் வாங்குவார்கள். வீட்டை வாடகைக்கு விட்டு பணம் வரும், நிலத்தை குத்தகைக்கு விட்டு இருப்பார்கள். பால், முட்டை விற்பார்கள். தெரு ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஒரு பகுதியை கடை ஒன்றுக்கு வாடகைக்கு விடுவார்கள்.
ஆக இதன் நவீன வடிவம் தான் இந்த ஏழு வகை வருமானம் என்பது. முதல் வருமானம் சம்பளம். இரண்டுபேர் வேலைக்கு போகும் வீடுகள் பெருகிவிட்டன. இதனால் இரண்டு சம்பளம் வாங்கும் வீடுகள் நிறைய உள்ளது. இதிலும் கணவன் வேறு கம்பனி, மனைவி வேறு கம்பனி என இருந்தால் ஒருவருக்கு வேலை இழப்பு வந்தாலும், இன்னொருவர் சம்பளம் கைகொடுக்கும் என்கிறார்கள். ஆக இதில் இரண்டு வருமானம் ஆச்சு
இரண்டு சம்பளம் வரும் வீடுகளில், குறைவான சம்பளத்தை சேமித்துவிட்டு, பெரிய சம்பளத்தில் செலவுகளை மெய்ன்டெய்ன் செய்யவேண்டும் என்பது ஒரு உத்தி. நாள்பட, நாள்பட சிக்கனம் கூடி, பெரிய சம்பளத்தை சேமித்துவிட்டு, சின்ன சம்பளத்தில் குடும்பம் நடத்தவேண்டும் என்பது இன்னொரு லட்சியம்.
இப்படி வரும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்தால் மூன்றாம் வருமானம் பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் வரும் வருமானம். பங்கு ஈவு (டிவிடண்ட்) அல்லது பங்கு விலை ஏற்றம் மூலம் வரும் வருமானம்.
பங்குச்சந்தையில் நிறைய பணம் சேர்ந்துவிட்டால், அதை எடுத்து நிலம் அல்லது வீடு வாங்கலாம். அதை வாடகைக்கு விடலாம். இது நாலாவது வருமானம். இது தான் ஒருவரை தலைமுறை பணக்காரன் ஆக்கும் முதலீடு. எங்கோ மலிவாக கிடைக்கிறது என இடத்தை வாங்கிபோட்டால், 10- 20 வருடங்களில் அதன் மதிப்பு எங்கோ போய்விடும். இது நாலாவது வருமானம்.
வீட்டு வாடகையை எடுத்து, வீட்டு கடன் வாங்கி இன்னும் ஒரு வீடு வாங்கலாம். மெதுவாக ரியல் எஸ்டேட் வணிகத்தில் கால் வைப்பது போல் வீடுகள், அபர்ட்மெண்ட்களை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கலாம். இது ஐந்தாவது வருமானம். ஒரு எல்லைக்கு மேல் நாம் சம்பாதிப்பதை விட நம் பணமே அதிக சம்பாத்தியம் ஈட்டும்.
ஆறாவதாக நம் பொழுதுபோக்குகள் மூலம் ஈட்டும் வருமானம். உங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா? அதை சோசியல் மீடியா மூலம் சந்தைப்படுத்தி சின்னதாக ஒரு பிசினஸ் துவக்கலாம். நல்லா சமைக்க தெரியுமா? மாலை வேளைகளில் அதை பிசினசாக ஆரம்பிக்கலாம். சில சமயம் இதுவே பிக்கப் ஆகி, வேலையை எல்லாம் விட்டுவிட்டு முழுநேர தொழிலாக செய்யும்படிக்கு ஆகிவிடும். பலரும் ரீல்ஸ், யுடியூபில் வருமானம் ஈட்டுகிறார்கள்., இது ஆறாம் வருமானம்.
பங்குகள், முதலீடுகள் போக வேறு வகைகளில் பணத்தை முதலீடு செய்யலாம் என்கிறார்கள். பிரைவேட் லெண்டிங் என சொல்லி கம்பனிகளுக்கு கடன் கொடுக்கலாம். வங்கிகடனை கட்ட முடியாமல் திவால் ஆகிறவர்களின் வீடுகளை மலிவான விலையில் ஏலத்தில் எடுத்து, ரிப்பேர் செய்து விற்று காசு பார்ப்பவர்கள் உண்டு. இது ஏழாம் வகை வருமானம்.
ஒற்றை ஆள் சம்பளத்தில் ஆரம்பித்து கடைசியில் பெரிய பிசினஸ் பிஸ்தாக்கள் ஆக சொல்கிறார்கள். தற்போது நாம் எந்த எந்த வருமான லெவலில் இருந்தாலும், மெதுவாக ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டே செல்லலாமாம்.
- நியாண்டர் செல்வன்