கதம்பம்

சீனம் கொடுத்த கொடை

Published On 2025-03-05 03:45 IST   |   Update On 2025-03-05 03:45:00 IST
  • சீனா உலகுக்குத் தந்த மற்றொரு பங்களிப்பு தேயிலை வளர்ப்பு ஆகும்.
  • கி. பி. 15ஆம் நூற்றாண்டில் ஐராப்பாவில் அது மிகப் பரவலானது.

உலக நாகரிகத்திற்குப் பண்டைச் சீனர்கள் தந்த தொழில்நுட்பக் கொடைகள் பலவாகும். உலகு அவற்றைப் போற்றுகிறது.

கி.மு. 3000 ஆண்டளவிலேயே சீனத்தில் பட்டுத்துணி நெய்யும் தொழில் தோன்றிவிட்டதாம். பட்டுப்பூச்சியை வளர்க்கும் முறையையும் பட்டுநூலிழை செய்யும் தொழிலையும் சீனம் பல நூற்றாண்டுக் காலம் கமுக்கமாகப் பொத்திவைத்துக் காத்து வந்ததாம். பட்டுத்துணி ஏற்றுமதியை வைத்துத்தான் 'பட்டுப்பாதை' (Silk Road) தோன்றியது.

'பட்டுப்பாதை' எனும் சொல்வழக்கு கி. பி. 19ஆம் நூற்றாண்டில்தான் தோன்றினாலும், கி. மு. 114ஆம் ஆண்டளவிலேயே நடுஆசியாவை நோக்கிய அந்தப் பாதை தோன்றிவிட்டதாம். சீனர்கள் அதற்குப் பிறகு கண்டுபிடித்த எழுதுதாளும் வெடிமருந்தும் (Gun Powder) கூட இந்தப் பாதை வழியாகத்தான் மேலேயுலகுக்குச் சென்றனவாம்.

சீனத்தின் மேற்குப் பகுதியில்தான் பீங்கான் செய்யும் தொழில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. 'ஆன்' (Han) அரசக்குடியின் ஆட்சியின் போதுதான் பண்டைச் சீனத்தில் பீங்கான் தொழில் தோன்றியதாம். ஆயினும், 'டாங்' (Tang) அரசக்குடி ஆட்சியின்போதுதான் பீங்கான் 'பட்டுப்பாதை'யின் (Silk Road) ஊடாகப் பெருமளவில் ஏற்றுமதியானதாம்.

'சோங்' (Song கி. பி. 960-1279) அரசக்குடி ஆட்சிக்காலத்தில்தான் சீனக் குயவர்கள் ஒளியூடுருவும் வெண்ணிறப் பீங்கானை உருவாக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்றனராம். இக்காலத்துப் பீங்கான்தான் 'உண்மையான பீங்கான்' எனப்பட்டது.

சீனா உலகுக்குத் தந்த மற்றொரு பங்களிப்பு தேயிலை வளர்ப்பு ஆகும். தேநீர் அருந்தும் பழக்கம் சீனாவில்தான் தொடங்கியது. 'டாங்' (Tang) அரசக்குடி ஆட்சியின்கீழ்த் தேயிலைப் பண்பாடு செழித்தோங்கியது.

கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சீனத்துப் பட்டு கடல்வழியில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை வந்தடைந்தாம். தமிழ் வாணிபர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்குப் பட்டை இறக்குமதி செய்திடினும், பட்டுத்துணி ஓர் ஆடம்பரப் பொருளாகவே கருதப்பட்டதால், இங்கு அஃது எழுதுப்பொருளாகவில்லை.

மூங்கில் மேலும் பட்டுத்துணியின் மேலும்தான் பண்டைச் சீனர்கள் முதலில் எழுதிவந்தனர். இந்நிலையில், முசுமுசுக்கை மரப்பட்டை, கந்தல்துணி முதலிய பொருட்களைக்கொண்டு எழுதுதாளைச் செய்ய கற்றது பண்டைச் சீனத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியது.

'ஆன்' (Han கி.மு. 206- கி.பி 220) அரசக்குடி ஆட்சியின்கீழ்க் கி. பி. 105ஆம் ஆண்டிலேயே 'காய் லுன்' (Cai Lun) எனும் வழக்குமன்ற அதிகாரியால்தான் முதன்முதலில் 'எழுதுதாள்' (காகிதம்) செய்யப்பட்டதாம்.

எழுதுதாளைச் செய்ய கற்றதையடுத்து 'டாங்' (Tang கி. பி. 618-907) அரசக்குடி ஆட்சியின்போது சீனத்தில் அச்சுத் தொழிலும் முதன்முதலில் தோன்றியது. மரத்தாலான அச்சுக்கட்டையைக் (Wood-block) வைத்து எழுதுதாளின்மேல் முதலில் அச்சிடப்பட்டது. நூலின் ஒரு பக்கம் முழுவதையும் ஒரு மரக்கட்டையில் செதுக்கி அதன்மேல் மையைப் பூசி எழுதுதாளின்மேல் பதித்துத்தான் முதன்முதலில் நூல்கள் சீனமொழியில் அச்சேற்றப்பட்டன.

'சோங்' (Song கி. பி. 960-1279) அரசக்குடி ஆட்சிக்காலத்தில் தனித்தனி எழுத்துகளுக்கான தனித்தனி அச்சுக்கட்டைகளைக்கொண்டு அச்சிடுகின்ற முறை தோன்றியது. இந்த அச்சுமுறையால் அறிவுநூல்களைப் பதிப்பித்து பரப்பும் வாய்ப்பு சீனத்திற்குக் கிட்டியது.

எழுதுதாள் (காகிதம்) செய்யும் தொழில்நுட்பம் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் - குறிப்பாக கி. பி. 751ஆம் ஆண்டில் 'தலாசு' போரின் (Battle of Talas) போதுதான் - எழுதுதாள் செய்ய வல்ல சீனர்கள் பிடிபட்ட பிறகுதான் - இசுலாமிய நாடுகளுக்கு எழுதுதாள் அறிமுகமானதாம். சில நூற்றாண்டுகளின் ஊடே அது படிப்படியாக ஐரோப்பாவுக்குப் பரவியதாம். முதல் எழுதுதாள் ஆலைகள் கி. பி. 11ஆம் நூற்றாண்டில் இசுபெயினில் நிறுவப்பட்டன. கி. பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதுதாள் செய்யும் தொழில் இத்தாலி முதலிய ஐரோப்பியப் பகுதிகளுக்கு பரவி, கி. பி. 15ஆம் நூற்றாண்டில் ஐராப்பாவில் அது மிகப் பரவலானது.

-தமிழறிஞர் குணா

Tags:    

Similar News