- புனேவின் ஏலச்சீட்டுகடைகாரர் ஒருவருக்கு தான் கிடைத்தது.
- தங்கசட்டையை கொள்ளையடிக்க ஒரு கேங் திட்டமிட்டது.
2013.. ஒட்டுமொத்த இந்தியாவையும், ஏன் உலகையுமே அதிரவைத்த சம்பவம் புனேவில் நடந்தது.
"உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிபவர்" என கின்னஸ் புத்தகம் புனேவின் தத்தா புகே என்பவரை அறிவித்தது.
ப்ரூனே சுல்தான், அம்பானி, டாட்டா, பிர்லா என பலர் இருக்க இது யார் தத்தா புகே? அது என்ன உலகின் விலை உயர்ந்த சட்டை என அனைவரும் குழம்பினார்கள்.
தத்தா புகே புனேவில் சீட்டு கம்பனி நடத்திவந்தவர். தங்க நகைகள் மேல் ஆர்வம் அதிகம். நடமாடும் நகைக்கடை மாதிரி உடல்முழுக்க நகைகளை அணிந்து பவனிவந்தார். ஒரு நாள் "முழுக்க தங்கத்திலேயே சட்டை செய்துபோட்டுக்கொண்டால் என்ன?" என தோன்றியது.
புனேவின் நகை வணிகர்களை அணுக, வங்காளத்தில் இருந்து பதினாறு பொற்கொல்லர்களை வரவழைத்தார்கள். அவர்களும் சுமார் 3.2 கிலோ தங்கத்தில் சுமார் இரண்டரை கோடி ரூபாயில் தங்க சட்டையை தயாரித்து கொடுத்துவிட்டார்கள். இவரும் கின்னஸில் இடம்பிடித்துவிட்டார். (அதன்பின் 2014ல் பங்கஜ் பரேக் என்பவர் அதைவிட விலைமதிப்புள்ள தங்க சட்டையை தயாரித்து அணிந்து கின்னஸில் இவரது சாதனையை முறியடித்துவிட்டார்)
உலக வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், சக்ரவர்த்திகள் இருந்தும் யாருக்கும் தங்க சட்டையை அணியும் பாக்கியம் இதுவரை கிடைத்ததில்லை. புனேவின் ஏலச்சீட்டுகடைகாரர் ஒருவருக்கு தான் கிடைத்தது. அத்தனை மதிப்புள்ள சட்டையை அணிந்து கொண்டு கல்யாணங்கள், விசேசங்களுக்கு போய் வந்தார். சுற்றிலும் பாதுகாப்புக்கு 20 பாடிகாட்டுகள்.
இந்த தங்கசட்டையை கொள்ளையடிக்க ஒரு கேங் திட்டமிட்டது. அதுல் என்பவன் நம்ம தங்கசட்டைகாரரின் மகனுக்கு நண்பன் ஆனான். வீட்டில் எல்லாம் போய் நெருங்கி பழகினான். "என் பிறந்தநாள் கொண்டாடணும். அப்பாவை தங்க சட்டையை போட்டுக்கொண்டு வர சொல்லு" என ரிக்வெஸ்ட் வைத்தான்.
அதன்பின் "அது சின்ன அபார்ட்மெண்ட். அங்கே 20 பாடிகாட்டுகள் எல்லாம் வந்தால் தாங்காது. பாடிகாட்டுகள் இல்லாமல் வரசொல். பாதுகாப்புக்கு நான் காரண்டி" என்றான் அதுல். அதன்பின் பார்ட்டிக்கு இருவரும் போக, மகனிடம் "நீ இவனுடன் போய் 20 பிரியாணி வாங்கிட்டு வா" என நைசாக பேசி அனுப்பினான்.
மகன் சென்றவுடன், பார்ட்டியில் இருந்த மீதமுள்ள 12 பேரும் கேன்க்ஸ்டர்கள். அவர்கள் சேர்ந்து நம்ம தஙக்சட்டைகாரரை அடித்து துவைத்தார்கள். அதன்பின் மேலே அணிந்திருந்த சாதாரண சட்டையை விலக்கிபார்த்தால் உள்ளே தங்க சட்டை இல்லை. ஆபிஸில் இருந்து நேராக வந்ததால் தங்க சட்டை இல்லாமல் வந்திருக்கிறார்..
இத்தனை கஷ்டபட்டு திட்டம் போட்டு எல்லாம் வீணாகபோய்விட்டது என அவரை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க, மகன் வந்து பதறி அவரை மருத்துவமனையில் சேர்க்க, அங்கே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சும்மாவா சொன்னார்?
- நியாண்டர் செல்வன்