இந்தியா

ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய்கள் திருடப்பட்டதால் 20 பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறலால் அவதி

Published On 2024-12-19 07:21 IST   |   Update On 2024-12-19 07:21:00 IST
  • டாக்டர்களும், தொழில் நுட்ப ஊழியர்களும் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர்.
  • குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுவாசப்பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து, ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படும் 10 முதல் 15 அடி நீளமுள்ள செம்பு குழாய்களை துண்டித்து திருடிச்சென்றனர். செம்புக்குழாய் துண்டிக்கப்பட்டதால், செயற்கை சுவாசம் தடைப்பட்டது. இதனால் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆக்சிஜன் தடைப்பட்ட சில நொடிகளில், அந்த வார்டில் இருந்து அலாரம் ஒலித்தது. இதையடுத்து டாக்டர்களும், தொழில் நுட்ப ஊழியர்களும் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர். குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

அதேநேரம் தொழில்நுட்ப உதவியாளர்கள் அங்கு என்ன நடந்தது என்று ஆய்வு செய்தனர். அப்போதுதான், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் செம்புக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக வேறு சிலிண்டர்களில் இருந்து மாற்று இணைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

இந்த விவரம் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அவர்களிடம் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் கிரண் வாடியா, குழந்தைகள் நல டாக்டர் ஆர்.எஸ்.மாத்தூர் பேசி, நிலைமையை சரி செய்துவிட்டதாகவும், அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் நடந்த திருட்டு பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News