செய்திகள்

டென்மார்க் பெண் கற்பழிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்: 9-ந்தேதி தண்டனை அறிவிப்பு

Published On 2016-06-06 15:23 IST   |   Update On 2016-06-06 15:23:00 IST
டென்மார்க் பெண் கற்பழிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என டெல்லி திஸ்ஹசாரி கோர்ட் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக டெல்லி வந்தார்.

ஜனவரி 14-ந்தேதி இரவு அவர் ரெயில் நிலையம் அருகே உள்ள டிவிசன் ரெயில்வே ஆபிசர்ஸ் அறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் டென்மார்க் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தது. மேலும் அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் சிறார் என்பதால் அவர்கள் விசாரணை சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது.

டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை நடந்தது. 27 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் லால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார்.

இந்த வழக்கில் கடந்த 26-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முன்பு அறிவித்தது. பின்னர் தீர்ப்பு இன்றைய தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி டென்மார்க் பெண் கற்பழிப்பு வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரமேஷ் குமார் தீர்ப்பு அளித்தார். 5 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது குற்றாவளிகள் மகேந்திரா என்கிற கஞ்சா (27), முகமது ராஜா (23), ராஜூ(24), அர்ஜூன் (22), ராஜி சக்கா (23), கோர்ட்டில் இருந்தனர்.

இவர்களது மீது இந்திய தண்டனை சட்டம் 376 (டி) (கும்பலாக கற்பழிப்பு), 395 (வழிப்பறி), 366 (கடத்தல்), 342 (தவறாக அடைத்து வைத்தல்), 506 (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்படுகிறது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்த 5 பேர் மீதான தண்டனை விவரம் 9-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.

Similar News