செய்திகள்

தயாசங்கர் குடும்பத்தினர் குறித்து அவதூறு: மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது போலீசில் புகார்

Published On 2016-07-23 06:19 IST   |   Update On 2016-07-23 06:19:00 IST
தயாசங்கர் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் மாயாவதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

லக்னோ:

தயாசங்கர் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் மாயாவதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை தரக்குறைவாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பாராளுமன்றத்திலும் அந்த கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தயாசங்கர் சிங்கின் கட்சிப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன், கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அவதூறு கருத்துகளுக்காக மத்திய மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.

தனது கருத்துகளுக்காக தயாசங்கர் சிங் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.

அவரை கைது செய்ய வலியுறுத்தி லக்னோவில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பகுஜன் சமாஜ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் தலைவர்கள் தயாசங்கரின் குடும்பத்தை தரக்குறைவாக விமர்சித்தனர். குறிப்பாக தயாசங்கரின் மனைவி சுவாதி சிங் மற்றும் அவரது 12 வயது மகள் ஆகியோரை மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி சிங், இதுகுறித்து மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் மீது நேற்று லக்னோவில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் புகார் செய்தார். அவருடன் தயாசங்கரின் தாயும் உடன் சென்றார்.

முன்னதாக சுவாதி சிங் கூறுகையில், ‘என்னையும், எனது மகளையும் குறித்து பகுஜன் சமாஜ் தலைவர்கள் கூறிய கருத்துகளால் எனது மகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார். பள்ளிக்கு செல்வதற்கு கூட அஞ்சுகிறாள். அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றும் ஒரு கட்சியினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு மாயாவதியே பொறுப்பு’ என்றார்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியினரின் கருத்துகளுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மாநில பொதுச்செயலாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், ‘தனது செயலுக்காக தயாசங்கர் வருத்தம் தெரிவித்த போதும், அவரை கட்சியில் இருந்து நீக்கி நாங்கள் தண்டனை வழங்கினோம். ஆனால் தனது கட்சியினரின் செயல்களுக்கு மாயாவதி என்ன செய்யப்போகிறார்? தயாசங்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முடியுமென்றால், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு எதிராக ஏன் வழக்கு போட முடியாது?’ என கேள்வி எழுப்பினார்.

ஆனால் தனது கட்சியினரின் செயல்களை மாயாவதி நியாயப்படுத்தி உள்ளார். பாராளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பா.ஜனதா தலைவரின் குடும்பத்தினரை பற்றி பேசிய பிறகுதான் பெண்களை இழிவுபடுத்துவதில் உள்ள வலியை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். எனினும் இதுபோன்ற கருத்துகளை தவிர்க்குமாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார். 

Similar News