செய்திகள்

ஜம்முவில் இயல்புநிலை திரும்புகிறது: 17 நாட்களுக்கு பின்னர் செல்போன், இன்டர்நெட் சேவை மீண்டும் தொடக்கம்

Published On 2016-07-26 08:59 IST   |   Update On 2016-07-26 08:59:00 IST
வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெல்ல இயல்புநிலை திரும்பிவரும் நிலையில் ஜம்முவில் 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறையும், கலவரமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த கலவரங்களில் பாதுகாப்பு படையினர் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். இருதரப்பிலும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் கலவரமும் வதந்திகளும் பரவாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடந்த 17 நாட்களாக செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்து அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். தற்போது ஜம்மு பகுதியில் மீண்டும் இயல்புநிலை திரும்பிவரும் நிலையில் அங்கு 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.

Similar News