செய்திகள்

ஒடிசாவில் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் மிதித்து உடைக்கப்பட்டதில் நடவடிக்கை: ரெயில்வே போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

Published On 2016-08-28 05:00 IST   |   Update On 2016-08-28 05:00:00 IST
ஒடிசாவில் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் மிதித்து உடைக்கப்பட்டதில் ரெயில்வே போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டனர்
புவனேசுவரம்:

நாடு சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் விபத்தில் இறந்த ஒரு மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் நெஞ்சை கசக்கிப் பிழிவதாக அமைந்துள்ளது.

அங்கு பலாசூர் மாவட்டத்தில் சோரோ ரெயில் நிலையம் அருகே சலாமணி பெஹரா என்ற 80 வயதான ஒரு மூதாட்டி ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அடுத்த ஊரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விபத்து நடந்து 12 மணி நேரத்துக்கு பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசாரால், ஆம்புலன்சு வசதி செய்ய முடியவில்லை.

இறந்தவரின் உயரமோ, உடலை எடுத்துச் செல்வதற்கு இடையூறாக இருந்தது. உடனே ஒரு தொழிலாளி மூதாட்டி உடலின் இடுப்பில் மிதித்து, கால்களை மடக்கினார். அப்போது உடல், இரு துண்டுகளாக உடைந்து போனது. பின்னர் உடைந்த உடலை சாக்குமூட்டையில் கட்டி, மூங்கில் கட்டையில் தொட்டில் போல பிணைத்து 2 தொழிலாளர்கள் தூக்கிச்சென்றனர். தன் தாயின் உடலுக்கு நேர்ந்த கதியைக் கண்டு மனம் வெதும்பி, மூதாட்டியின் மகன் கதறியது, கல்நெஞ்சையும் கதற வைப்பதாக இருந்தது. 
இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரஸாக பரவியது. இதையடுத்து அந்த மூதாட்டியின் உடலை உரிய முறைப்படி எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல் தனது பணியில் அசட்டையாக இருந்த ரெயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் மிஷ்ராவை ரெயில்வே போலீஸ் நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பிரச்சினையை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Similar News