செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் வங்கியில் பட்டப்பகலில் ரூ.12 லட்சம் கொள்ளை

Published On 2016-11-21 18:11 IST   |   Update On 2016-11-21 18:11:00 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வங்கியில் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
ஸ்ரீநகர்:

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பழைய நோட்டுக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. பழைய நோட்டுக்களை மாற்ற செல்லும்போது சில இடங்களில் கொள்ளைச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு முகமூடி அணிந்து துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல், துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது. பத்காம் மாவட்டம் சிரார்-இ-ஷரீப் பகுதியில் உள்ள அரசு வங்கியில் இந்த கொள்ளை நடந்துள்ளது.

கேஷியரை மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற பணத்தின் மதிப்பு சரியாக தெரியவில்லை. எனினும், அதன் மதிப்பு ரூ.12 லட்சம் வரை இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பினால், தீவிரவாதிகள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்ற முடியாத நிலையில், கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Similar News