செய்திகள்

திருப்பதிக்கு சென்று திரும்பிய போது விபத்து: 5 பக்தர்கள் பலி

Published On 2017-05-31 14:37 IST   |   Update On 2017-05-31 14:37:00 IST
கடப்பா அருகே மணல் லாரி மீது, திருப்பதி பக்தர்கள் வந்த வேன் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே, 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமலை:

ஐதராபாத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசிக்க வேனில் திருமலை வந்தனர். இன்று அதிகாலை சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் ஐதராபாத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வேன் கடப்பா மாவட்டம், தூவனூரு அடுத்த கானகடூரு பகுதியில் வந்தபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த மணல் லாரி மீது வேகமாக மோதியது.

இதில், வேனில் வந்த ஆண், பெண், மற்றும் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுக்குள் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.



தூவனூரு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 8 பக்தர்களை மீட்டு கர்னூல் மாவட்டம் சாகலமர்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்தனர்.

விபத்தில் சிக்கி பலியானவர்கள் பெயர் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவர்கள் ஐதராபாத்தில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News