செய்திகள்

மராட்டிய விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி

Published On 2017-06-24 16:55 IST   |   Update On 2017-06-24 16:55:00 IST
மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் நடத்திவந்த தொடர் போராட்டத்தின் முதல்கட்ட வெற்றியாக விவசாயிகளின் பயிர் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மும்பை:

மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன்  18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக, விவசாயிகளின் பயிர் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். 40 லட்சம் விவசாயிகளின் கடன் சுமை நீங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும் என தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Similar News