செய்திகள்

உ.பி. ரெயில் விபத்தில் 23 பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

Published On 2017-08-19 21:26 IST   |   Update On 2017-08-19 21:38:00 IST
உத்திரபிரதேசத்தில் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகரின் கடாவுளி பகுதியில் பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டியின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ரெயிலானது ஹரித்வாரில் இருந்து பூரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என ரெயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News