செய்திகள்

அரசியல் கட்சிகளுக்குள் உள்கட்சி ஜனநாயகம் குறித்து விவாதிக்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

Published On 2017-10-29 01:40 IST   |   Update On 2017-10-29 01:40:00 IST
அரசியல் கட்சிகளுக்குள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

அரசியல் கட்சிகளுக்குள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையகத்தில், தீபாவளி கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்து அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் மதிப்புகள், சித்தாந்தங்கள், உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ, புதிய தலைமுறை தலைவர்களுக்கு எவ்வாறு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தோ விவாதிக்கப்படுவதில்லை.

உள்கட்சி ஜனநாயகம் பற்றி விவாதிக்கும் நடைமுறையை நமது நாடு பெரிதான அளவில் அறிந்திருக்கவில்லை. ஊடகங்கள் தங்கள் கவனத்தை அதன்பக்கம் திருப்ப வேண்டும்.

ஜனநாயக மதிப்புகள் அவற்றின் (கட்சிகள்) அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது பற்றி பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்குள் உண்மையான ஜனநாயக உணர்வின் வளர்ச்சி தேவை என்று நான் நம்புகிறேன். இது நாட்டின் எதிர்காலத்துக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்துக்காகவும்தான்.

பாரதீய ஜனதா கட்சி சிறிய அமைப்பாக இருந்தபோது அல்லது ஜனசங்க காலத்தில் கட்சிக்குள் பல குரல்கள் எழுந்தன. மாறுபட்ட கருத்துகளும் இருந்ததால்தான் கட்சி வளர்ச்சி பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொண்டாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தீபாவளி அன்றுதான் குஜராத்தில் புத்தாண்டு பிறக்கிறது. நாடு கடந்த ஓராண்டில் பல சவால்களை சந்தித்து வெற்றி கண்டுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம்” என்று கூறினார். 

Similar News