செய்திகள்

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை: புதிய ரெயில் பாதையை தொடங்கி வைக்கிறார்

Published On 2017-10-29 08:46 IST   |   Update On 2017-10-29 08:46:00 IST
ஒருநாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிற்றுக் கிழமை) கர்நாடகம் வருகிறார். பீதர்- கலபுரகி இடையே புதிய ரெயில் பாதையை தொடங்கி வைப்பதோடு மங்களூருவில் உள்ள தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
பெங்களூரு:

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிற்றுக் கிழமை) கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணியளவில் மங்களூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தாலாவுக்கு 10.50 மணியளவில் செல்கிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் மஞ்சுநாதா கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். காலை 11 மணியளவில் அந்த கோவிலில் சிறப்பு பூஜை செய்து அவர் சாமி தரிசனம் செய்கிறார். சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பின்னர் உஜ்ரிக்கு சென்று காலை 11.45 மணியளவில் ஸ்ரீசேத்ரா தர்மஸ்தலா கிராம அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சி மற்றும் ஊர்வலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மதியம் 1 மணியளவில் மங்களூருவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்படுகிறார். மதியம் 2 மணியளவில் அவர் பெங்களூருவுக்கு வருகிறார். பின்னர் மதியம் 3 மணியளவில் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் ‘தசமா சவுந்தர்யலகாரி பரயாநோத்சவா‘ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பீதர் மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு செல்கிறார். பீதர் மாவட்டத்தில் இருந்து கலபுரகிக்கு 104 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, மாலை 6 மணியளவில் பீதர் ரெயில் நிலையத்தில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பீதர்-கலபுரகி இடையிலான புதிய ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் பீதர் மாவட்டத்தில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி மங்களூரு, பெங்களூரு, பீதரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“பிரதமர் நரேந்திர மோடி அரண்மனை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அரண்மனை மைதானத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அங்கு 24 மணிநேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அரண்மனை மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் மத்திய ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே நேரத்தில் பிரதமரின் வருகையையொட்டி அரண்மனை மைதானம், அதனை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றமும், முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கிடையே, பீதர்- கலபுரகி இடையிலான புதிய ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ள நிலையில், இதில், கலந்து கொள்ள முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முறையான அழைப்பு விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக புதிய ரெயில் பாதை தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சியினரும் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்திற்கு வருகை தருவதையொட்டி பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Similar News