செய்திகள்

டெல்லியில் குடியரசு தின விழா: முதல் முறையாக 3 வெளிநாட்டு பிரதமர்கள் பங்கேற்பு

Published On 2017-10-29 11:15 IST   |   Update On 2017-10-29 11:15:00 IST
ஜனவரி மாதம் 26-ந்தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக 3 வெளிநாட்டு பிரதமர்கள் பங்கேற்கின்றனர்.
புதுடெல்லி:

ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த முறை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் 2 வெளிநாட்டு பிரதமர்கள் கலந்து கொள்கிறார்கள். கிழக்கு ஆசிய நாடுகளாக வியட்நாம் பிரதமர் நகுயே என் சுயான் புக் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்லுங் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

அந்த அழைப்பை இரு நாட்டு பிரதமர்களும் ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அவரும் டெல்லி குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3 பிரதமர்கள் கலந்து கொள்வார்கள்.

இதேபோல் ஆசிய நாட்டு பிரதமர்கள் மேலும் சிலர் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் குடியரசு தின விழாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதமர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் 1968 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1968-ல் யுகோஸ்லாவியா அதிபர் கோசிப் புரோஸ் டைட்டோ, சோவியத் யூனியன் அதிபர் கோசிஜின் ஆகியோரும், 1974-ல் டைட்டோ மீண்டும் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை அதிபர் திருமதி பண்டாரநாயகாவும் கலந்து கொண்டனர். 

Similar News