செய்திகள்

குஜராத், இமாசலபிரதேச தேர்தல் எதிரொலி: புதிய ரெயில்கள் அறிமுகத்துக்கு தேர்தல் கமிஷன் தடை

Published On 2017-11-01 06:04 IST   |   Update On 2017-11-01 06:05:00 IST
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான புதிய ரெயில்களை அறிமுகப்படுத்த கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது
புதுடெல்லி:

இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் இந்த மாதமும், குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதமும் நடைபெறுகின்றன. அதனால், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

இந்நிலையில், ரெயில்வே புதிய கால அட்டவணை இன்று அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் புதிய ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, ரெயில்வே அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அதில், “நாடு முழுவதற்குமான ரெயில்வே புதிய கால அட்டவணையை ரெயில்வே துறை வெளியிடலாம். திட்டமிட்டபடி, நவம்பர் 1-ந்தேதி முதல், அதை அமலுக்கு கொண்டு வரலாம். ஆனால், புதிய கால அட்டவணையை விளம்பரப்படுத்தக்கூடாது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான புதிய ரெயில்களை அறிமுகப்படுத்தவோ, தொடங்கி வைக்கவோ கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், மேற்கண்ட 2 மாநிலங்களிலும் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்த தேர்தல் கமிஷன் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

Similar News