செய்திகள்

மோடி பற்றி விமர்சனம்: பா.ஜனதா - சிவசேனா மோதல் முற்றுகிறது

Published On 2017-11-01 11:29 IST   |   Update On 2017-11-01 11:29:00 IST
பிரதமர் நரேந்திர மோடி பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வதால், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இடையேயான மோதல் முற்றுகிறது.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.

பாரதிய ஜனதாவை சேர்ந்த பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். சிவசேனாவை சேர்ந்த 12 பேர் மராட்டிய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் மத்திய மந்திரி சபையிலும் சிவசேனா இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே சமீப காலமாகவே பிரதமர் நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதாவையும் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்றும், ராகுல் காந்தி திறமையான தலைவர் என்றும் சிவசேனா எம்.பி., சஞ்சய்ராவத் தெரிவித்தார்.

நேற்று அவர் அளித்த பேட்டியில் எங்களது முதல் எதிரி பாரதிய ஜனதா தான் என்றும், தேர்தலில் தனித்து போட்டியிட சிவசேனா தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்த பேட்டியை தொடர்ந்து பாரதிய ஜனதா- சிவசேனா இடையேயான மோதல் முற்றுகிறது.

பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு பிறகும் சிவசேனாவின் விமர்சனம் தொடர்கிறது. இரு கட்சிகள் இடையேயான மோதல் முற்றி வருவதால் எந்த நேரத்திலும் முறிவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News