செய்திகள்

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க முடியாது: மத்திய அரசு

Published On 2017-11-01 17:04 IST   |   Update On 2017-11-01 17:04:00 IST
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த 2014 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதன் பின்னர் இது குறித்து மேலும் சில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையம் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள்  தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளோம். வாழ்நாள் தடை விதித்தால் அரசியல் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும்’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால், மத்திய அரசின் சார்பில் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் அமைக்கலாம் என்றும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரிக்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பான பதிலை மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் தாக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Similar News