செய்திகள்

ஆணாக மாற விரும்பிய பெண் போலீஸ் - முதல்கட்ட பாலின மாற்று ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது

Published On 2018-05-25 16:54 IST   |   Update On 2018-05-25 16:54:00 IST
மும்பையில் ஆணாக மாற விரும்பிய பெண் போலீஸ் லலிதா சால்வேக்கு இன்று முதல்கட்ட பாலின மாற்று ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். #genderchangesurgery
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே(வயது29). இவர் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை காவல்துறை நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். இது நிர்வாகம் தொடர்பான பிரச்சினை என்பதால் மகாராஷ்டிர நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த லலிதா சால்வே, ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆண் போலீசாக பணியாற்றவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஒப்புதல் அளித்ததையடுத்து, லலிதாவுக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக விடுப்பில் செல்ல லலிதாவுக்கு அனுமதி அளித்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த லலிதா, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாரானார். கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு, இன்று பாலின மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜத் கபூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்நிலையில், லலிதா சால்வேக்கு முதல்கட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக மருத்துவர் ரஜத் கபூர் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆபரேசன் நடைபெறும் என அவர் கூறினார். #genderchangesurgery
Tags:    

Similar News