செய்திகள்
பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினாரா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து பொருளாதாரம் பற்றிய ஆலோசனை நடத்தினாரா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் இந்திய பொருளாதாரம் மிகவும் கடின சூழலில் இருப்பதை குறிக்கும் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோவில் மோடியை மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி இணைந்து வரவேற்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
ஃபேஸ்புக்கில் வைரலாகும் இந்த வீடியோவின் உண்மையை ஆய்வு செய்ததில், இது 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. நரசிம்ம ராவ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் நிதி மந்திரியாக பணியாற்றினார். இதுதவிர மன்மோகன் சிங் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், திட்டக்குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.
இந்திய பொருளாதாரம் பற்றிய ஆலோசனை நடத்த பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து இருக்கலாம் என கருதி பலர் இந்த வீடியோவை தங்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் தற்சமயம் வைரலாகும் வீடியோ மே 27, 2014 இல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இருவரின் சந்திப்பு பற்றி பல்வேறு செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் மன்மோகன் சிங்கை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகின. எனினும், இதுபற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.