செய்திகள்
கொலை

மராட்டியத்தில் தந்தையை கொன்று உடலை வீட்டுக்குள் புதைத்த சிறுவன்

Published On 2020-03-02 04:20 IST   |   Update On 2020-03-02 04:20:00 IST
மராட்டியத்தில் தந்தையை கொன்று உடலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்த 16 வயது சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவுரங்காபாத்:

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தாலுகாவில் உள்ள ஜாம்திகாட் கிராமத்தை சேர்ந்தவர் நாம்தேவ் சவான்(வயது50). இவர் கடந்த டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். கடந்த 2 மாதத்துக்கு மேலாக அவரை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், நாம்தேவ் சவான் கொலை செய்யப்பட்டு உடல் அவரது வீட்டுக்குள்ளேயே புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக நேற்றுமுன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று தோண்டி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு இடத்தில் 2½ அடி ஆழத்தில் நாம்தேவ் சவானின் உடல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், நாம்தேவ் சவானை அவரது 16 வயது மகன் அடித்து கொன்று உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. விசாரணையில் மேலும் தெரியவந்ததாவது:-

சம்பவத்தன்று நாம்தேவும், கொலையாளியான அவரது 16 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு உண்டானது. இதில் கோபம் அடைந்த அந்த சிறுவன் உருட்டு கட்டையை எடுத்து தந்தை என்று கூட பாராமல் நாம்தேவை சரமாரியாக தாக்கி உள்ளான். இதில் படுகாயம் அடைந்த அவர் வேதனை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்.

பின்னர் அவன் நாம்தேவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தான். பின்னர் பயந்து போன அவன் போலீசுக்கும், மற்றவர்களுக்கும் தெரியாமல் இருப்பதற்காக தந்தையின் உடலை மறைக்க முடிவு செய்தான்.

அதன்படி வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விட்டு பின்னர் அந்த இடத்தை மூடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டான். அக்கம்பக்கத்தினர் விசாரிக்கவே பயந்து போன அந்த சிறுவன் தந்தையை கொலை செய்தது பற்றி தனது சகோதரனிடம் தெரிவித்து உள்ளான். அதன்பிறகு அக்கம்பக்கத்தினருக்கு இந்த தகவல் கசிந்து போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் தந்தையை கொன்று புதைத்த 16 வயது சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News