செய்திகள்
சட்டசபை கூட்டத்தொடர் ரத்து: முழு ஊரடங்கு குறித்து திங்கட்கிழமை ஆலோசனை- கேரள மாநில கேபினட் முடிவு
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 27-ந்தேதி தொடங்க இருந்த சட்டசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது, சிறப்பாக கையாண்டு கட்டுப்பத்தியது கேரளா. கடந்த மாதம் தொடக்கத்தில் தினந்தோறும் அப்டேட்டில் ஒன்று அல்லது இல்லை என்ற அளவிற்கு கொண்டு வந்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ஆயிரத்தைத் தாண்டியது. இதற்கிடையில் ஜூலை 27-ந்தேதி சட்டசபை கூட இருந்தது.
இதுகுறித்து முடிவு எடுக்க இன்று கேரள மாநில மந்திரி சபை கூடியது. மந்திரி சபை கூட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த சாத்தியமில்லை. இதனால் ரத்து செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்து முடிவு எடுக்க திங்கட்கிழமை சிறப்பு மந்திரி சபை கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.