ரேணிகுண்டாவில் காதல் தோல்வியால் போலீஸ் ஏட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த ராவ். (வயது 30). இவர் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை செய்து வந்தார்.
சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த ராவ் கடந்த 2-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று அதிகாலை 4 மணிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் துப்பாக்கியால் தனது கழுத்தில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஸ்டோர் ரூமுக்கு சென்று பார்த்தனர். அங்கு ஆனந்த ராவ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனந்தராவ் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்த ராவ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஏட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.