செய்திகள்
கர்ப்பிணி பெண்

5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி

Published On 2021-11-16 09:53 GMT   |   Update On 2021-11-16 11:54 GMT
மும்பையில் 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி கவ்லி (38). அங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் பணியமர்த்தப்பட்டு செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதற்கு முன்பாக, இரண்டு சுகாதார மையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த ஐந்து ஆண்டு பணிக்காலத்தில் ஜோதி சுமார்  5 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க உதவி உள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஜோதி, தனது பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட சிக்கல்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜோதி, கடந்த 2ம் தேதி அன்று தான் பணிபுரியும் அதே மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். அதே நாளில், அவருக்கு திடீரென நிமோனியா மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட்டது. ஜோதியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானதை அடுத்து நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்பு, அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிப்பதற்காக அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News