இந்தியா

சபரிமலையில் டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்வது நிறுத்தம்

Published On 2024-12-21 09:59 GMT   |   Update On 2024-12-21 10:06 GMT
  • பல்வேறு புதிய நடைமுறைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமல்படுத்தியது.
  • மண்டல பூஜையில் பங்கேற்கவும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். அதுபோன்று நடக்காமல் இருக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமல்படுத்தியது.

இதன் காரணமாக கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடை பெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதற்கு முன்னதாக நடைபெறக்கூடிய தங்க அங்கி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் மண்டல பூஜையில் பங்கேற்கவும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

இதனால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதனை தவிர்க்கும் விதமாக வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில், சபரிமலைக்கு குறைந்த அளவிலான பக்தர்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த இரு நாட்களும் ஸ்பாட் புக்கிங் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

மேலும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. மண்டல பூஜைக்கு முந்தைய நாளான வருகிற 25-ந் தேதி 50 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை நடைபெறும் 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு சீசனில் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மற்றும் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படும் திட்டம் அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு மேல் பக்தர்கள் வந்தாலும், 'ஸ்பாட் புக்கிங்' முறையில் அனுமதி வழங்கி சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த இரு தினங்களாக 'ஸ்பாட் புக்கிங்' மூலமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்றிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மண்டல பூஜை தினத்தில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' நிறுத்தப்படுகிறது. மண்டல பூஜை சீசன் 26-ந்தேதியுடன் முடிவடைவதால், ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News