வேகத்தால் வந்த வினை.. 4 வயது சிறுவன் மீது காரை ஏற்றி கொன்ற இளைஞர்
- சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.
- விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 19 வயது இளைஞர் ஓருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து, வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் நடந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடேவின் குடும்பம் , நடைபாதையில் வசிப்பதாகவும், அவரது தந்தை ஒரு தொழிலாளி என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டி வந்த சந்தீப் கோல் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது. சமீபத்தில், மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) நிறுவனத்தால் இயக்கப்படும் மின்சாரப் பேருந்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குர்லாவில் நடந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக சாலை விபத்துகளை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2018-2022 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் அதிக சாலை விபத்து இறப்புகள் (1,08,882), தமிழ்நாடு (84,316) மற்றும் மகாராஷ்டிரா (66,370) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.