இந்தியா

மண்டல பூஜையின் சிறப்பு- சபரிமலைக்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்

Published On 2024-12-22 12:00 GMT   |   Update On 2024-12-22 12:00 GMT
  • தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.
  • விழா முடிந்ததும் அங்கி ருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய இந்த தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.

மண்டல பூஜைக்காக இங்கிருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சபரிமலை அய்யப்பனுக்கு அணி விக்கப்படும். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும்.

இந்த ஆண்டு மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணி விக்கப்பட வேண்டிய தங்க அங்கி மற்றும் நகைகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது.

சபரிமலை கோவிலை போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேருக்கு தங்க ஆபரணங்கள் வந்ததும் ஊர்வலமாக தேர் புறப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் தங்க அங்கியை வழிபட்டனர்.

இந்த ஊர்வலம் வரும் 3 நாட்களில் ஓமநல்லூர் ஸ்ரீரக்த கண்டசுவாமி கோவில், கொன்னி முரிங்கமங்கலம் ஸ்ரீ மகா தேவர் கோவில், ரன்னி-பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவில்களில் நிறுத்தப் பட்டு வழிபாடு நடத்தப்படும்.

25-ந் தேதி நிலக்கல் ஸ்ரீசிவன் கோவில் மற்றும் பம்பை கணபதி கோவில்களில் தங்க அங்கி ஊர்வலத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும்.

அன்று மாலை 6 மணிக்கு சன்னிதானம் சென்றடையும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் (26-ந் தேதி) மண்டல பூஜை வழிபாடு நடைபெறும். மறுநாள் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி நடை திறக்கப்படும்.

Tags:    

Similar News