இந்தியா

சினை பசுவின் வயிற்றில் இருந்து 60 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றம்- கன்றுக்குட்டியுடன் பலியானது

Published On 2023-06-14 10:27 IST   |   Update On 2023-06-14 10:27:00 IST
  • பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
  • ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நந்தியால் நகரப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சுற்றித் திரிகின்றன.

அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து சாலையோரம் கொட்டப்படும் வாழை இலைகள், மீதமான உணவுகளை தின்று வருகின்றன.

மேலும் தெருக்களில் சுற்றிவரும் பசுக்களை கோமாதாவாக எண்ணி வீட்டில் உள்ள பெண்கள் பசுகளுக்கு பழம், வீட்டில் மீதமான உணவுகள், அகத்திக்கீரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் 8 மாத சினை பசு ஒன்று நடக்க முடியாமல், சாணம் மற்றும் கோமியம் கழிக்க முடியாமல் அவதி அடைந்து வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வலியால் அவதிப்பட்ட சினை பசுவை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கால்நடை டாக்டர்கள் சுதாகர் ரெட்டி அபிலாஷ் ரெட்டி ஆகியோர் பசுவிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தனர். பசுவின் வயிற்றில் 60 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

பசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை டாக்டர்கள் அகற்றினர்.

மேலும் பசுவின் வயிற்றில் இருந்த கன்றுக்கு இயற்கையான உணவு கிடைக்காததால் இறந்து இருந்தது. தொடர்ந்து பசுவும் பலியானது.

ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.

இவற்றை உண்ணும் கால்நடைகளில் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்து விடுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்க நேரிடுகிறது.

எனவே பிளாஸ்டிக்கை அரசு முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News