இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு இன்று ரூ.20,000 கோடி இழப்பு

Published On 2024-08-12 16:19 GMT   |   Update On 2024-08-12 16:19 GMT
  • அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
  • இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.

அதில் 'அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது' என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. 

சந்தை மதிப்பு சரிவால், இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது

ஹிண்டன்பெர்க் - அதானி பங்குகள் - செபி விவகாரத்தின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரிதளவு தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இன்றைய வர்த்தகம் சற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

Tags:    

Similar News