டெல்லியில் உள்ள தெலுங்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு பிரசாரம்
- டெல்லியில் பாஜக அரசாங்கம் இருந்திருந்தால் நியூயார்க், வாஷிங்டனுக்கு இணையாக உலக நகரமாக மாறியிருக்கும்.
- டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுடன், அரசியல் மாசுபடும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் உள்ள தெலுங்கு மக்களிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு உடன் அவரது கட்சியை சேர்ந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஊரக வளர்ச்சி அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர், ஆந்திர துணை சபாநாயகர் ரகுராம ராஜு ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "தற்போதைய டெல்லி 1995 இல் ஐதராபாத்தைப் போல தோற்றமளிக்கிறது. டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இருந்திருந்தால் நியூயார்க், வாஷிங்டனுக்கு இணையாக உலக நகரமாக மாறியிருக்கும். டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுடன், அரசியல் மாசுபடும் அதிகரித்துள்ளது.
ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டாவில் ஒரு அரண்மனையை கட்டினார், ஆனால் அந்த அரண்மனை திறக்கப்படுவதற்கு முன்பே மக்கள் தேர்தலில் அவரை வீழ்த்தினர். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் சீஷ்மஹாலைக் காட்டியுள்ளார். டெல்லி மக்கள் ஆம் ஆத்மியின் அரசை அகற்றிவிட்டு, வளர்ச்சி மற்றும் நலன் ஆகிய இரண்டையும் உறுதிசெய்ய பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் ஆத்மி அரசு டெல்லியை உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாற்றியுள்ளது. முன்பு பீஹாரிகள் வேலைக்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். தற்போது, டெல்லியில் வளர்ச்சி இல்லாததால், வேலைக்காக அவர்கள் தென் மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கங்கையை சுத்தப்படுத்தினார். ஆகவே டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் யமுனை நதியையும் மோடி சுத்தப்படுத்துவார்" என்று தெரிவித்தார்.