இந்தியா

மோசமான நிலையில் யமுனை: பெண்களுடன் சென்று கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட முயன்ற ஸ்வாதி மாலிவால் எம்.பி.

Published On 2025-02-03 15:17 IST   |   Update On 2025-02-03 15:18:00 IST
  • யமுனை ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 7,500 கோடி ரூபாய் பணம் எங்கே?
  • கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீரில் குழிக்க முடியுமா?. வாய்ப்பு இருந்தால் குடிக்க முடியுமா? என கேட்க விரும்புகிறோம்.

டெல்லி மாநிலத்திற்கு குடிநீர் வழங்கும் யமுனை ஆற்று நீரில் ஹரியானா அரசு விஷம் கலந்ததாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம் என டெல்லி மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் பூர்வாஞ்சல் பகுதி பெண்களுடன் யமுனை நதி நீரை பாட்டிலில் அடைத்து கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.

அதன்படி இன்று காலை யமுனை நதிக்கு சென்று பாட்டிலில் தண்ணீர் பிடித்து, கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்றனர். வீட்டருகே சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கொண்டு சென்ற தண்ணீரை ஒரு இடத்தில் கொட்டி இதில் கெஜ்ரிவால் குழிப்பாரா? அல்லது தண்ணீரை குடிப்பாரா? என கேள்வி எழுப்பினர்.

கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக ஸ்வாதி மாலிவால் கூறியதாவது:-

கெஜ்ரிவாலால் யமுனை ஆறு மாசடைந்த வடிகால் ஆக மாறிவிட்டது. நான் ஆயிரக்கணக்கான பூர்வாஞ்சல் பெண்களுடன் யுமுனை நதி கரையோரத்திற்கு வந்துள்ளேன். இங்குள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளது. துர்நாற்றத்தால் எங்களால் இங்கே நிற்க முடியாமல் தவித்து வருகிறோம்.

நான் மற்றும் பூர்வாஞ்சல் பெண்கள் கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். யமுனை ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 7,500 கோடி ரூபாய் பணம் எங்கே? என்பது குறித்து கேள்வி எழுப்ப இருக்கிறோம்.

அவரை பார்த்து நாங்கள் யமுனை ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீரில் குழிக்க முடியுமா?. வாய்ப்பு இருந்தால் குடிக்க முடியுமா? என சவால்விட இருக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News