உ.பி.யில் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை: யோகி ஆத்தியநாத் மீது மம்தா கட்சி சாடல்
- பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது.
- உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 30-ந்தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், எலும்புகள் முறிந்து இருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்படடு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள மாநில ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது. 22 வயது இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜக இதுவரை மவுனமாக உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?. தலித் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாக்குறுதி வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.