இந்தியா

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ.12 லட்சத்துக்கு ரூ.10 லட்சம் வரி - அதுவே நேரு ஆட்சியில்.. மோடி பேச்சு

Published On 2025-02-03 16:47 IST   |   Update On 2025-02-03 16:47:00 IST
  • 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1 கோடி பேர் பயனடைவார்கள்
  • அன்றைக்கு அப்படித்தான் இருந்தது, அதனால்தான் இன்று இதை விளக்குகிறேன்.

 டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இன்றுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ஆர்.கே. புரம் தொகுதியில் நேற்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "நேரு ஜி காலத்தில், நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், உங்கள் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை அரசாங்கம் வரியாக எடுத்துக் கொள்ளும்.

இதுவே இந்திரா ஜியின் ஆட்சிக்காலமாக இருந்தால், ரூ.12 லட்சத்தில் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரியாகப் போகும் என்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அன்றைக்கு அப்படித்தான் இருந்தது, அதனால்தான் இன்று இதை விளக்குகிறேன்" என்று தெரிவித்தார்.

 

மேலும் 10 -12 ஆண்டுகளுக்கு முன்பு கூட காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் வருமானத்துக்கு ரூ. 2.6 லட்சத்தை வரியாகச் செலுத்தவேண்டியிருக்கும், ஆனால் தனது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பட்ஜெட் அதே வருமானத்திற்குப் பூஜ்ஜிய வரியை உறுதி செய்கிறது என்று மோடி கூறினார்.

இந்திரா காந்தி, நேரு ஆட்சி நடந்த காலாக்கட்டம் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாகும். அப்போதைய சூழலில் ரூ.12 லட்சம் என்பது இன்றைய மதிப்புக்கு பல கோடிகள் ஆகும். எனவே மோடியின் இந்த ஒப்பீடு மக்களை முற்றிலும் தவறாக வழிநடத்துவது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News