இந்தியா

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு: நாளைமறுதினம் வாக்குப்பதிவு

Published On 2025-02-03 18:43 IST   |   Update On 2025-02-03 18:43:00 IST
  • 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 83.76 லடச்ம் போர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள்.
  • வாக்குப்பதிவு நாளில் 42 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளைமறுதினம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து 10-ந்தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு மீதான பரிசீலனை ஜனவரி 18-ந்தேதி வரை நடைபெற்றது. ஜனவரி 20-ந்தேதி வரை வேட்மனுவை திரும்பப்பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் போட்டியிடும் இறுதி வாக்காளர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட பிறகு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில ஈடுபட்டன. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பல்வேறு இலவச வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்தது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.

கடைசி நாளான இன்று அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவால், வாக்களித்த வாக்குகளில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என வீடியோ மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அதிக அளவில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாஜக தலைவர்கள் பலர் ரோடு ஷோ நடத்தினர்.

நாளைமறுதினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சுமார் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 83.76 லடச்ம் போர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள். 1267 பேர் மூன்றாம் பாலினத்தினர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் 13766 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

42 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்களுடன் 220 கம்பெனி பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

Tags:    

Similar News