மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு ஆளாகின்றனர்- கனிமொழி எம்.பி
- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
- மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்.பி.க்கள் பேசினர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்.பி.க்கள் பேசினர்.
அப்போது, கனிமொழி எம்.பி கூறியதாவது:-
இந்தியாவின் வரலாற்றைப் பற்றி நீங்கள் பேசும்போது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்தியாவில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தொடங்கியது என்று ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்றுவரை ஒன்றிய அரசு வாய்த்திறக்கவில்லை.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும், நாட்டின் குடிமகன் என சமமாக உணர வேண்டும்.
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3,000 கோடியில் சிலை வைப்பது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது.
பட்டேலின் வார்த்தையை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
சிறுபான்மையினர் எந்த விதத்திலும் சவுகரியமாக உணரக்கூடாது என்பதை ஒவ்வொரு நடவடிக்கையிலும் மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு சட்டம் போன்றவை இதற்கு உதாரணம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் லவ் ஜிகாத் என்கிற புதிய வார்த்தையை கொண்டு வருகிறீர்கள்.
பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை காவல் தறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். எந்த ஒரு ஆட்சேப குரல் எழுந்தாலும், தேச விரோதம் என ஒதுக்கப்படுகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் உயிரிழந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசும், மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர். மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கும்பமேளா நெரிசலில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது கூட தெரியவில்லை. கும்பமேளா நெரிசல் குறித்து விவாதம் நடத்தக் கூட மத்திய அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். ஒருவேளை டெல்லி தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்களோ? இது ஒரு மனிதாபிமானமற்ற செயலல்லவா?
இவ்வாறு அவர் கூறினார்.