மகா கும்பமேளா கூட்டநெரிசல்.. உ.பி அரசுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- உயிரிழப்புகளுக்குக் காரணமான உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்
- விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. கூட்டநெரிசலுக்கு மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து விசாரித்து உயிரிழப்புகளுக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற ஆன்மீக ஒன்றுகூடல்களில் கூட்டநெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்க கோரியும் விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வக்கீல் முகுல், கூட்டநெரிசல் குறித்து மாநில அரசால் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அலகாபாத் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் பின் பேசிய நீதிபதிகள், இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இருப்பினும் மனுதாரர் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உத்தரப் பிரதேச அரசுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.