கும்பமேளா குறித்து விவாதிக்கக்கோரி அமளி: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
- எதிர்க்கட்சிகளின் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த 29-ந் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகா கும்பமேளாவில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா முக்கிய விவாதங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு தருவதாக உறுதி அளித்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் உறுதியை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சிகளின் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவை நடவடிக்கையை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். கேள்வி நேரத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். சபையை சீர்குலைப்பது பொருத்தமானது அல்ல. உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றவில்லை.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.
இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, 'அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தான் மக்கள் உங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்களா? என்றார்.
மேல்சபையிலும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்த பிரச்சனையை கிளப்பினார்கள். கும்பமேளா உயிரிழப்பு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலயுறுத்தினார்கள். இதை அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் ஏற்கவில்லை.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'நமது நடத்தை முன் மாதிரியாகவும், நமது விவாதங்கள் புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அளித்த மகா கும்பமேளா உயிரிழப்பு, அரசியல் சாசனம் அவமதிக்கப்படுவது உள்ளிட்ட 9 ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது' என்றார்.
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினார்கள்.
கும்பமேளா உயிரிழப்பு குறித்து விவாதிக்க அனுமதிக்காததை கண்டித்து மேல்சபையில் இருந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி நாளை மாலை 5 மணிக்கு பேசுகிறார்.