null
பழங்குடியின நலத்துறை அமைச்சராக உயர் சாதியினர் இருக்க வேண்டும் - சுரேஷ் கோபி சர்ச்சையும் விளக்கமும்
- பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சராக முடியாது என்பது இந்த நிலத்தின் மீதான சாபம்
- நான் மோடியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன்
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரை பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக நியமித்ததால் முன்னற்றம் கிடைக்கும் என்று கூறி பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் முன்னணி மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்வில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வென்றது இதுவே முதல்முறை. எனவே சுரேஷ் கோபிக்கு பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆம்புலன்சில் திருச்சூர் பூரம் விழாவுக்கு சென்றது, ஊடகவியலாளரை தவறான முறையில் நடத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு பெயர்போன கோபி தற்போது சாதீய ரீதியாக பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி மலையாளிகள் அதிகம் வசிக்கும் மயூர் விகார் காலனியில் நேற்று கோபி, "பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சராக முடியாது என்பது இந்த நிலத்தின் மீதான சாபம். 'உயர் சாதியில்' பிறந்த ஒருவர் பழங்குடியின சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பது எனது கனவு.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களின் அமைச்சகத்தின் தலைவராக இருப்பதற்குப் பதிலாக 'உயர் சாதி' உறுப்பினர்களுக்கு அந்த இலாகா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றம் நமது ஜனநாயக அமைப்பில் ஏற்பட வேண்டும்.
ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ பழங்குடி விவகாரங்களைக் கவனிக்கட்டும், அப்போது அதில் பெரிய மாற்றம் ஏற்படும். நான் மோடியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன், ஆனால் இதில் சில சட்டப்பூர்வ சிக்கல்கள் உள்ளன" என்று பேசியுள்ளார்.
தான் ராஜ்யசபா எம்.பி ஆனதில் இருந்தே தனக்கு பழங்குடியின இலாகாவை ஒதுக்க வேண்டும் என மோடியிடம் கேட்டதாக கோபி தெரிவித்தார்.
இந்த கருத்து சர்ச்சையான நிலையில் தான் பழங்குடியினரை முன்னேற்றும் நோக்கத்தில்தான் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் அந்த கருத்தை திரும்பப்பெறுவதாகவும் சுரேஷ் கோபி இன்று தெரிவித்துள்ளார்.