மன்னிப்பு கேட்ட முதல் மந்திரி: பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என கேள்வி எழுப்பிய காங்கிரஸ்
- மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
- இதையடுத்து, பிரதமர் ஏன் மணிப்பூர் சென்று மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். மணிப்பூர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த 3-4 மாதமாக அமைதியை நோக்கி மாநிலம் முன்னேறி வருகிறது. வரும் புத்தாண்டில் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன். மணிப்பூர் மக்கள் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே மாநிலத்திற்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.