தூக்கத்தை கெடுத்த பக்கத்து வீட்டு சேவல் மீது புகார் - அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை!
- தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
- அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.
ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.
மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.