இந்தியா

இலவசங்களால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து

Published On 2025-02-12 19:38 IST   |   Update On 2025-02-12 19:38:00 IST
  • பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை மற்றும் பிற திட்டங்கள் போன்றவற்றால், மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை.
  • இலவச ரேசன் பொருட்கள் மற்றும் எந்தவிதமான வேலை செய்யாமலும் பணத்தை பெற்று வருகிறார்கள்.

தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கி வருகிறது. டெல்லி தேர்தலின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், ஆம் ஆத்மி மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தன.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கான தங்குமிடம் உரிமை குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. ஒரு ஒட்டுண்ணி வர்க்கம் உருவாக்கப்படுகிறதா? என்று வியப்படைய வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்தனர்.

மேலும், நாட்டு வளர்ச்சியின் பங்களிப்பிற்கான, சமூதாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக அவர்களை ஊக்குவிக்காமல், நாம் ஒட்டுண்ணி வர்க்கத்தை உருவாக்குகிறோமா? என கேள்வி எழுப்பினர்.

நீதிபதி கவாய் "மகாராஷ்டிரா மாநிலத்தில் லட்கி பஹின் (Ladki Bahin) திட்டத்தின் மூலம் வருட வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள 21 வயது முதல் 65 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதேபோல் மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வழங்குகின்றன. துரதிருஷ்டவசமாக, தேர்தல்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் இலவசங்கள், பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை மற்றும் பிற திட்டங்கள் போன்றவற்றால், மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்கள் இலவச ரேசன் பொருட்கள் மற்றும் எந்தவிதமான வேலை செய்யாமலும் பணத்தை பெற்று வருகிறார்கள்" என்றார்.

அவர்களை பற்றிய உங்கள் கவலை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பில், சமூகத்தில் ஒரு பகுதியாக அவர்களை மாற்றுமா? என பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

அப்போது ஒரு மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் "அவர்கள் வேலை வாய்ப்பை பெற்றால், வேலைக்கு செல்லாமல் இருக்க விரும்பமாட்டார்கள்" என்றார்.

அப்போது நீதிபதி கவாய் குறிக்கிட்டு "நீங்கள் ஒரு பக்க அறிவை மட்டும் கொண்டிருக்கிறீர்கள். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலை கணக்கில் கொண்டு இலவசங்கள் அறிவிக்கப்பட்டது. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை" என்றார்.

Tags:    

Similar News