ஜனநாயகத்தில் சமநிலை அவசியம்: கட்சிமாற சொன்ன என்.சி.பி. தலைவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பதிலடி
- எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும்.
- நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
படுதோல்வியடைந்த சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் கட்சித்தாவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கட்சி மாறுவார் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் நான்கு நாட்கள் நடைபெறும் லத்தூர் சர்வதேச சினிமா விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில் பேசியபோது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி, விக்ரம் காலே, "தேஷ்முக் கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மந்திரியாக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
இதற்கு லத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமித் தேஷ்முக் பதில் அளிக்கையில் "எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும். அது நம் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
ஆளும் கட்சி பலம் பெற்று வருவதாக பலர் உணர்ந்தால், அவர்கள் கட்சி மாறக்கூடும். ஆனால் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.