இன்னும் ஒரு வாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பசவராஜ் பொம்மை
- வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
- சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட அளவில் உள்ள கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அவர்களது கருத்துகள் கேட்டு அறிந்தவுடன், பா.ஜனதாவின் தலைமை தேர்தல் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். எனவே இன்னும் வாரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. 2013-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எதற்காக அவரை மக்கள் புறக்கணித்தனர். முதல்-மந்திரியாக இருந்த போது மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்திருந்தால், மக்கள் புறக்கணித்திருக்க மாட்டார்கள்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் சித்தராமையாவை மக்கள் புறக்கணிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் எதற்காக இடஒதுக்கீடு வழங்கவில்லை. நான் தற்போது திடமான முடிவை எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் விதமாக இடஒதுக்கீடு வழங்கி அறிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.