டெல்லியில் 2 இடங்களில் மட்டும் தான் போட்டி.. காங்கிரசை 4-ம் இடத்திற்கு தள்ளிய ஒவைசி
- ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
- AIMIM போட்டியிட்ட ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.
கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி AIMIM கட்சி வேட்பாளர்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் என்ற 2 தொகுதிகளில் AIMIM போட்டியிட்டது. ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.
ஓக்லா தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 23639 வாக்குகள் அதிகம் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 12739 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.
முஸ்தபாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 17578 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 11763 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.