திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சி.பி.ஐ. 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
- திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது
அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது.
இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின்,
அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகரன் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.